Tuesday, March 16, 2010

தொலையும் பொக்கிஷங்கள்----இ.இராஜேஸ்கண்ணன்

தன் மனதைப் போலவே உச்சிச் சூரியன் உமிழும் வெயில் தகித்துக் கொண்டிருக்க, முகமெல்லாம் கருமை போர்த்தி, மனம் சோர்ந்து விறாந்தையில் போடப்பட்ட சாய்மனைக் கட்டிலில் வீழ்ந்தார் தம்பி யண்ணை. ‘மல்ரி பெரல்களாய்’ இதயம் வெடிப்பது போன்ற உணர்வு. மனத்திலே பல்லாயிரம் ஆணிகளால் அறைந்த தவிப்பு. உள்ளத்துப் புழுக்கம் உடலெல்லாம் வியர்வையாகி ‘சேட்’டோடு ஒட்டி உடல் நசநசத்துவர எல்லாமே வெறுத்தது போன்ற உணர்வு. அலுத்துக் கொண்டார். காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளிக்கிட்டவர்- ஒரு மணி யாகிவிட்டது - இப்போது தான் வருகின்றார். அவரது நிலைமையை என்னால் ஓரளவு உணரமுடிந்தது. ‘பிள்ளை மாமாவுக்கு குடிக்க எதாவது கொண்டு வாணை. நடு வெயிலுக்காலை வாறார். குளிர எதாவது குடெணை’. எனது மூத்தவளுக்கு கூறியவாறே தம்பியண்ணைக்கு முன்னிருந்த கதிரையிலே அமர்ந்து கொள்கிறேன். “என்ன தம்பியண்ணை கொஞ்சம் வேளைக்கு வரக்கூடாதே – வெயில் ஏறேக்கு முன்னம் - இந்த உச்சி வெயிலுக்காலை வாறியள்……..” தம்பியண்ணையை வருடும் வகையில் எதாவது கேட்க வேண்டும் என்பதற்காக ஒப்புக்குக் கேட்டுவைத்தேன். அவர் தன்னை சுதாகரித்துக் கொள்கிறார். எனினும் உள்ளுர அவருக்கிருந்த பதகளிப்பு இன்னும் ஆறியபாடில்லை. தம்பித்துரை அண்ணை என்பது தான் ‘தம்பியண்ணையின்’ விரிந்த வடிவம் என்பது பலரும் அறியாத போதிலும் அவரை ‘தம்பியண்ணை’ என்றே அழைப்பது வழக்கமாயிற்று. தம்பியண்ணை என்னுடைய தந்தையின் மூத்தசகோதரி – பெரிய மாமியின் - மகன். அத்தான். வயதிலே மூத்த மைத்துனர்களை அத்தான் என்பதுதான் வழமை. எனக்கு நேரே இரு வயதுகள் மூத்தவர் என்பதனால் எமக்கிடையே வயதினால் உண்டான வேறுபாடுகள் எவையும் இல்லை. அத்தான் என்றாலும் ஒரு வித நெருக்கம் கருதி ‘அண்ணை’ என்று சொல்லி வரும் பழக்கம் என்னிடம் சிறுவயதிலிருந்தே முறை வழுவமைதியாக வந்து சேர்ந்து விட்டது. எங்களுடைய குடும்பத்தில் முதல்பிறந்தவர் என்பதால் எனக்கு இளைய சகோதரிகள் அவரை ‘மூத்தத்தான்’ என்று தான் அழைப்பார்கள். என்னுடைய கடைசித் தங்கையின் உறவுமுறை இன்னும் வித்தியாசமானது. அவள் அவரை ‘தம்பியண்ணை அத்தான்’ என்றுதான் அழைத்து வருகிறாள். அந்தளவிற்கு எல்லோருக்கும் தம்பியண்ணை ஆகிவிட்டார் அவர். நீண்ட காலம் ‘தம்பியண்ணை’ ஊரிலே இல்லை. நேற்றுக் காலையில் தான் பயணத்தால் வந்திருந்தார். கனடாவிலே தன்னுடைய மகனின் குடும்பத்தோடு ஆறு வருடமாக இருந்துவிட்டு இப்போது தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். “செல்லம், புதிதாக பிறந்த மாதிரிக்கிடக்கடா எங்கடை ஊரிலை திரும்பியும் காலை வைப்பன் எண்டு கனவிலும் நினைக்கவே இல்லையடா. ஒரு மாசமெண்டாலும் நிண்டுதான் போகப்போகிறன். உன்ரை கடைசிப் பெடியன் கூட என்ரை தோளுக்கு மேலாலை வளர்ந்திட்டான். எல்லாரையும் நேரை பார்க்க எவ்வளவு சந்தோசமாகக் கிடக்குத் தெரியுமே…? என்று தம்பியண்ணை நேற்று வந்தவுடன் ஆதங்கத் தோடு கூறிய வார்த்தைகள் இதயத்தை வருடிநின்றன. செல்லத்துரை என்ற எனது பெயரை சுருக்கி ‘செல்லம்’ என்று அழைப்பதுதான் அவரின் வாலாயம். “என்னண்ணை என்ன முகமெல்லாம் ஒரு மாதிரிக்கிடக்கு? பேயறஞ்சது மாதிரி. என்ன வெக்கை தாங்க முடியாமல் கிடக்கே….? என்ன ஒரே ‘ரென்ஷனா’ இருக்கிற மாதிரிக்கிடக்கு. உங்கை உங்கட மருமேள் தேசிக்காய்த் தண்ணி வைச்சிருக்கிறாள் குடியுங்கோ. குடிச்சிட்டுப் பிறகு சாப்பிட்டிட்டு கொஞ்சம் ‘றெஸ்ற்’ எடுங்கோ, கனகாலத்துக்குப் பிறகு எங்கட வெயில் சுட்டுப்போச்சு…..” என்று என் குரலோடு நளினம் சேர்த்து அவரை இயல்புக்குக் கொண்டு வர முனைந்தேன். “என்னத்தைக் குடிச்சென்ன சாப்பிட்டென்ன எல்லாம்…….” தம்பியண்ணையின் வார்த்தைகளில் வெளிப்படுவது ஏமாற்றமா? நம்பிக்கையீனமா? கழிவிரக்கமா? என்னால் பகுத்தறிய முடியவில்லை. “என்னண்ணை…...? மொட்டையாகவே கேட்டேன். “எல்லாம் அழிஞ்சுபோச்சுதடா. வீடும் சரி வாழ்க்கையும் சரி. வாழ வேண்டிய குடியை விட்டிட்டு வெளிக்கிட்டது பிழையாப்போச்சு. எங்கட வாழ்க்கை குலைஞ்சது போல ஆற்ரை வாழ்க்கை குலைஞ்சது…?” தம்பியண்ணை எங்கள் வீட்டிலே தான் தங்கி நிற்கின்றார். அவருடைய வீடு சென்றவாரம் வரை “ஆமிக்காம்ப்” பாகத்தான் இருந்தது. அவருடைய வீடும், அதற்கு அருகிலுள்ள நான்கு வீடுகளும் சேர்த்து இராணுவ முகாங்களாகப் பாவிக்கத் தொடங்கி இப்போது ஏறத்தாழ ஐந்து வருடங்களாகி விட்டன. முக்கியமான இரண்டு சாலைகள் குறுக்கிடும் நாற்சந்தியின் அருகே அமைந்த வீடு என்பதால் அதிலே இராணுவ முகாம் இடுமளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. இராணுவத்திற்கு மட்டுமல்ல, எங்கள் வாழ்விலும் கண்களும் பார்வையுமாக இணைந்துவிட்ட பெருமை அந்த வீட்டிற்கு உண்டு. எங்கள் குடும்பங்களின் தாய்வீடு அது. என்னுடைய தந்தையும், பெரிய மாமியும், சின்னமாமியும் பிறந்த இடம் அது. எங்களுடைய பேரன் பேர்த்தி உயிரோடு இருந்த காலத்திலே எங்கள் மூன்று குடும்பங்களினதும் கருவறையாக அந்த வீடுதான் விளங்கியது. நானும் என் அடுத்த இருசகோதரிகளும் அந்த வீட்டிலேதான் பிறந்தோம். சின்னவள்தான் நாம் இப்போது இருந்துவரும் அம்மாவின் சீதன வீட்டில் பிறந்தவள். எங்களைப் போலவே தம்பியண்ணையும், அவரது ஒரு சகோதரியும் அங்கு தான் பிறந்தார்கள். சின்னமாமிக்குப் பிள்ளைகள் இல்லை. அப்பா அம்மாவின் வீட்டுக்கு சென்றது போல சின்ன மாமியும் சின்னமாமாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். தம்பி யண்ணையின் குடும்பமும், மச்சாள் குடும்பமும் இந்த நாட்டை விட்டு வெளியேறும் வரை அங்குதான் வாழ்ந்து வந்தனர். நான்கு தலைமுறைகள் நலமாக வாழ்ந்த அந்த நாற்சார் வீட்டிற்கு ஒரு வரலாறு உள்ளதை இந்த ஊரில் இன்று அறிந்தவர் சிலரே. தம்பியண்ணை கனடாவில் நின்ற காலத்தில் எனக்கு எழுதும் கடிதங்களில் ஒன்றில் கூட அந்த வீட்டின் பெருமையை உணர்த்தி அதனை விசாரிக்கத் தவறியதில்லை. “செல்லம் எங்கட வீடு எங்கட பேரன் பேர்த்தி, அம்மா ஐயா, நாங்கள் எங்கட பொடி பெட்டை எல்லாம் சீவிச்சு ஒடியாடித் திரிஞ்ச இடம். எங்கட பேரப்பிள்ளையளும் அந்த முற்றத்திலே மிதிக்க வேணுமெடா. எங்களைப்போல விளையாட வேணுமடா. கவனிச்சுக் கொண்டு இரு. ஒரு காலம் வரும்தானே. அவங்கள் எழும்பின உடனேயே வீட்டை பழைய மாதிரி ஆக்கிப் போடவேணும்…….”அந்த வீட்டைப் பற்றி தம்பியண்ணை எழுதும் வரிகளில் என் மனதில் நீரில் வீழ்ந்த குருணிக்கல்லாய் புதைந்து நிலைத்துள்ள வரிகளிவை. தம்பியண்ணை இப்படியெல்லாம் எழுதும் வேளைகளில் என்னுடைய மனத்தினடியிலே ஆழப்புதைந்த அந்த நாட்களின் நினைவுகள் வந்து போகும். வழமைக்கு மாறாக வடக்கு நோக்கி அமைந்த முகப்பினை கொண்ட நாற்சார் வீடு. முகப்பு முற்றத்தில் இரண்டு அந்தலைகளிலும் இரண்டு பெரிய காய்த்துத் தள்ளும் பலாமரங்கள். இவற்றிடையே அம்பலவி, கறுத்தக் கொழும்பான் மாமரங்கள் இரண்டு. முகப்புவாயிலின் இருபுறமும் அளந்து வைக்கப்பட்ட பூஞ்செடிகளும் சாடிகளும், சுற்றிவரக் கழுத்துயர மதிற்சுவர். பிரதான வெளிவாயிலில் இருந்து முகப்புவரை பொழியப்பட்ட சலவைக் கற்கள் கொண்டு ஆக்கப்பட்ட நடைபாதை என்பவற்றோடு கூடிய அந்த வீட்டின் அழகு வார்த்தைகளில் வசப்படாதவை. அந்த வீடு தான் இப்போது எழில் குலைந்து சுடுகாடுபோல கிடக்கிறது. நிலை கதவுகள் இடிக்கப்பட்டு, மரங்கள் தறிக்கப்பட்டு, கிடங்குகள் தோண்டப்பட்டு, முள் வளையங்கள் போடப்பட்டு, நெருஞ்சி முள் அப்பி…. அந்த வீடு இருக்கும் காணி அந்தக் காலத்தில் ஒரு பெரிய கட்டாந்தரையாக இருந்ததாம். அதிலிருந்த மூன்று பனைகள் மாத்திரம் தான் அந்த நிலத்திற்கும் உயிர்ப்பு இருந்ததை உணர்த்தி நின்றன. ஒரு முக்கோணத்தின் மூன்று புள்ளிகளாய் நின்ற அந்தப் பனைகள் தான் அந்தக் காணியிலே வாழ்ந்த எங்கள் பேரன் பேர்த்தியின் குடிசையைக் கோபுரமாக்கிய சூட்சுமங்கள். வருடாவருடம் பாத்திபோட்டு வரும் பனங்கிழங்கு, ஒடியல், புழுக்கொடியல், ஊமல், பனாட்டு, கங்கு மட்டை விற்ற சேமிப்பில் உருவானது தான் அந்த வீடு என்பதை இன்று யாருமே நம்பிவிடப் போவதில்லை என்றாலும் உண்மை. “என்ன நீங்கள் உந்தப் பெரிய வீட்டைக் கட்டிப்போட்டு நடுக்காணியில் பனையளை விட்டிருக்கிறியள். மழை காத்துக்கு வீட்டுக்கு மேல சாஞ்சுதேயெண்டால்……?” என்று வீடு கட்டிய வேளையில் ‘நரி’ முருகேசு வாத்தியார் அப்புவைக் கேட்ட வேளையில், “எனக்கு மேல விழுந்து உயிர்போனாலும் பறவாயில்லை. அதுகள் தங்கபாட்டிலை நிக்கட்டும்”. என்று உறுதிபடக் கூறிய பதில் இன்றும் என் செவிகளில் நிறைந்துள்ளது. நானும் தம்பியண்ணையும் சிறுவர்களாக இருந்த காலத்தில் மாமாவைக்கொண்டு இரண்டு பனைகளுக்கு குறுக்காக மரங்கட்டி ஊஞ்சல் கட்டுவித்து ஆடிய நினைவுகள் எம்மனதில் பசுமையாக உள்ளன. நாங்கள் ‘அடிச்சுத்தொட்டு’ விளையாடும் போதிலெல்லாம் அந்த மூன்று பனைகளையும் சுற்றி ஆளையாள் துரத்திக்கொண்டு ஓடுவது விறுவிறுப்பைத் தந்தது. மூன்று பனைகளும் காய்த்துக் குலுங்கும் காலத்தில் வீடு களைகட்டும். அப்பிளுக்கு அவுஸ்திரேலியா என்றால் பனம்பழத்துக்கு யாழ்ப்பாணம். நாங்கள் ஓரளவு பருவமறிந்த சிறுவர்களாக இருந்த காலத்தில் ‘பனாட்டு பினைவது’ அப்புவின் வீட்டில் ஒரு சடங்காகவே நடைபெறும். பனம்பழங்களை பவ்வியமாகச் சேர்த்து வைத்து பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஆளும் பேருமாகச் சேர்ந்து ‘பினாட்டு பினைவதில்’ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உயிர்ப்பு. ஆச்சி தன்னுடைய பனையிலேயே சார்வோலை வெட்டுவித்து ‘பெரும்பனை ஒலைப் பினாட்டுப்பாய்’இழைப்பாள். பினைந்த பனங்களியை பனாட்டுப் பாயிலே தடிப்பாக வார்த்து வெயிலிலே காயவைத்து ‘கண்டோஸ்’ போன்ற துண்டுகளாய் வெட்டி, மண்பானையில் ‘கருப்பணி’ பாணிகாய்ச்சி வார்த்து அரிசிப்பொரியோடு பனாட்டுத் துண்டுகளைப் போட்டு, பல நாட்கள் ஊறவிட்டு ‘பனாட்டு காடி’போட்டு வைப்பார்கள். பாகிலே தோய்ந்த அந்தப் பனாட்டுத் துண்டுகளை வாயிலே போட்டு ‘ரொபியாக’ உவிந்த காலம் - இப்போது யாரிதைச் செய்கிறார்கள்?... பனாட்டு பிழிவதற்கு சேகரித்த பனம் பழங்களில் மிக உயர்ந்த தரமானவற்றைக் தெரிந்து கல்லடுப்பு மூட்டி, அடுப்பு வாயில் பனம் பழத்தை வைத்து தோல் கருகும் வரை எரித்து, சுட்டபின்னர் மூன்று மூன்றாக ‘கொட்டைகளை’ பிரித்து வைத்து, தோலுரித்து ‘பழப் புளியை’ களியாக கரைத்து பனம் பழத்தில் வார்த்து, கைகளினால் தும்பையும், களியையும் அழுத்தி பெரு விரலையும் ஆட்காட்டி விரலையும் வளையமாக ஒன்று சேர்த்து பிசைந்த பனங்களி, வளையமான விரலிடுக்கு வழியே பொங்கிவர வாயை வைத்து அந்தக் களியை உறிஞ்சிக் குடிப்பதில் உள்ள சுகம். “சொத்தலிக் கொட்டையை” தேர்ந்தெடுத்து முழுதாக வாயிலே தள்ளி ‘பபிள்கம்’ சப்புவது போல நாள் முழுக்க வாய் குதப்பித் திரிந்த சுகம். பாத்திகிண்டி படையல் வைத்தல், நெட்டி வெட்டி சீர் செய்து கிழங்கு அவித்தல், மொட்டு வெட்டி பூரான் தின்னுதல், புழுக்கொடியல் காயவிட்டு காவல் காத்தல் - இந்த சுகங்களையெல்லாம் வாழ்க்கையாக தந்தவை அந்த மூன்று பனை மரங்களும்தான். வாழ்வில் ஒவ்வொரு கணங்களும் கூடி வாழ்தல், கொடுத்து உண்ணுதல் போன்றவற்றின் வாளிப்புகள் - வசீகரங்களைத் - தந்தவை இவை. இவை எல்லாம் மனக்கடலின் அடியிலிருந்து மிதப்பெடுக்கும் போது, இப்போதைய எங்கள் வாழ்வுகள் அர்த்தங்கள் பொய்த்து அந்தரிப்பது போன்ற ஓர் உணர்வு. இந்தச் சுகங்களை எல்லாம் வாழ்க்கையாகத் தந்தவை அந்த மூன்று பனைமரங்களும் தான். ‘அடே அப்பு அவை, எங்களுக்கு மும்மூர்த்திகளும் இந்த மூண்டு பனையளுந்தானடா’. என்று எங்கள் பேரன் – அப்பு – அடிக்கடி சொல்வது இன்றும் நினைவிடை நிறைந்துள்ளது. தம்பியண்ணை வாழ்வே தொலைந்து விட்டதாக உணர்வது என் இதயத்து துடிப்போடு சேர்ந்து அதிரும் இழப்பின் உணர்வுகளை விட மேலானது என்பதை அறிந்தும் என்னால் அவரை ஆறுதல் படுத்த முடியவில்லை. ‘அண்ணை என்னண்ணை எங்களுக்கு மட்டுமே …. எல்லாருக்கும் இஞ்சை உப்பிடி ஒவ்வொரு ஏக்கம்தான் வாழ்க்கையாகிப் போய்க்கிடக்குது. நேற்று நீங்கள் வீட்டைப் பார்க்கப் போகப்போறன் எண்டு சொல்லையுக்கையே சொல்ல வேணுமெண்டு தான் நினைச்சன் ஆனால்..’ ‘என்னடா பேக்கதை கதைக்கிறாய் கடிதத்திலை ஒரு சொல்லு எழுதியிருக்க கூடாதே…. உதைப் பாக்கவே சந்தோஷமா ஓடி வந்தனான்…. மெய்யே சொல்லு….’ அண்ணையின் எதிர்பார்ப்புகள் பொய்த்த மன உணர்வுகள் வெப்பிசாரமாக வெளிப்பட்டது. ‘அண்ணை அவங்கள் அதுக்குள்ளை இருக்க நாங்கள் என்னண்ணை செய்யிறது. அறுவாங்கள் பங்கர் போடத்தானண்ணை தறிச்சிருப்பாங்கள்’ என் இதயம் உடைப்பெடுத்தது. என்னால் தம்பியண்ணையைத் தேற்ற முடியாததை உணர்த்திற்று. ‘நாசமாய் போவாங்கள். என்ரை வீட்டை அம்மணமாக் கியிருக்கிறாங்கள் பறவாயில்லை கட்டியதால் போடலாம். அந்த மூண்டையும் அப்பு எவ்வளவு பக்குவமா வளர்த்து பொக்கிசமா எங்களுக்கு விட்டிட்டுப் போனவர். அதை எப்பிடி இனி……’ அண்ணையின் வார்த்தைகள் தொண்டைக் குழியோடு சிறைப்பட்டன. சற்று நேர மௌனத்தை குலைத்துக் கொண்டு எழுந்தார். ‘செல்லம்…. எங்கையாதல் நல்ல பனங்கொட்டை பார்க்கப் போறன். என்ரை விசா முடிஞ்சாலும் பறவாயில்லை எத்தினை மாசமெண்டாலும் சரி இந்த வளவு முழுக்க விதைக்கப் போறன்’ உறுதியோடு கூறிக்கொண்டு எழுந்து தகிக்கும் வெயிலில் இறங்கி நடந்தார். அவருக்காக வைத்திருந்த ‘தேசிக்காய் தண்ணி’ அப்படியே கிடந்தது.- “ஞானம்”ஓக்டோபர் - 2002-

இறுக்கம்
----இ.இராஜேஸ்கண்ணன்

வழமைக்கு மாறாக மோட்டார் சைக்கிளை பிரதான வாயிலுக்கு அருகிலுள்ள நிழல் பரப்பிய பெரிய மரத்தின் கீழ் நிறுத்தவில்லை. பெரிய வாயிலிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த சிறிய வாயிலுக்கு அருகே தகிக்கும் வெயிலில் நிறுத்திவைத்துக் கொண்டே அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
பாடசாலைப் பிள்ளை கள் கூட்டமாக வெளியேறிக் கொண்டு இருந்தார்கள். திரண்டு நடக்கும் அவர்களின் காலடிகளிலிருந்து கிளம்பி வரும் உஷ்ணமான புழுதி எரிச்சலைத் தந்து கொண்டிருந்தது. தலையில் சுடும் உச்சி வெயில் உதிரத்தில் கொதியேற்றிக் கொண்டிருந்தது. மனம் நமைச்சில் பட்டுக் கொண்டிருந்தது.
வழமையாக அந்தப் பெரிய மரநிழலில் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டுப் போகும் காஞ்சனாவின் ஆறாம் வகுப்பு ‘மொனிட்டர்’ பிள்ளையின் குறுகுறுத்த பார்வையையும் இரட்டைக் குஞ்சங்களையும் ரசித்துப் பார்க்க முடியவில்லை.
“ரீச்சர் வாரா..... இந்தாங்க பாக்.....” என்று அந்தப் பிள்ளை என்னிடம் திணித்துவிட்டுப் போன காஞ்சனாவின் ‘ஹாண்ட் பாக்கினை’ கைபிடியில் தொங்கவிட்டுக் கொண்டு பிஷ்டத்தை தகிக்க வைத்த ‘சீற்ரில்’ அமர்ந்து கொண்டு எரிச்சலை ஒன்று கூட்டி உதைந்தது ‘ஸ்ராட்’ செய்து கொண்டு பின்னே வந்து அமர்ந்த அவளின் முகத்தை எப்போதும் அவளின் முகத்தை பார்ப்தற்கென்றே குறிவைத்துச் சரித்து விடப்பட்ட இடதுபுற கண்ணாடியினுள் ஊடுவிருப் பார்த்தேன்.
சர்வசாதாரணமாய், எல்லாவித வாளிப்புகளையும் இழந்து இருண்டு போயிருந்தது அவளின் முகம். சிரிப்புச் செத்துப்போன அவளின் முகத்தைப் பார்த்தவுடன் இதய அறையினுள் ஏதோ வெடித்துச் சிதறி உடலெல்லாம் சன்னமாய்ப் பரவுவது போல.........
“இஞ்சருங்கோ..... ஏன் தொப்பி போடயில்லை தலை அனலாக் கொதிக்குது.....”
“வெயில் சுட்டு முகம் இருண்டு போய்கிடக்கு ஏன்?”
“கன நேரமே வந்து... காவல் நிக்க வச்சிட்டன் போலை...”
“கையெழுத்துப் போட்டிட்டு வெளிக்கிடவும் பார்வதி ரீச்சர் ஒரு கதை கேட்கச் சொன்னா...... அதுதான் பிந்திப்போச்சு......”
என மிக அக்கறை உள்ளவளாய் இப்படி ஒரு சமாதானத்தை சொல்லிக் கொண்டே எனது வலதுபுறத் தோளினை இறுகப்பற்றிக் கொண்டு பின்னே ஸ்பரிசம் தந்து அமர்ந்து கொள்பவள். இடதுபுறக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தவாறே இடது புறக்காதோரம் சரிந்து அன்றைய நாளின் பாடசாலை புதினங்களை நளினமாக கதைத்துக் கொண்டு வருபவள் இன்று இறுகிப்போய்.....
நான் அவள் முகத்தையும், அவள் என் முகத்தையும் பார்க்க சரித்து விடப்பட்ட கண்ணாடியில் இன்று நான் மட்டுமே அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டு வருகின்றேன்.
“இந்த மூஞ்சையோடை தான் இண்டு முழுக்க பாடசாலையில் நிண்டாளாக்கும்....... இன்னும் கோபம் குறையேல்லைப் போலை. சரியான பிடிவாதக்காரி”.....
காஞ்சனாவின் மௌனம் மனதை அரித்து, எனக்குள் என்னைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது.
“கண்ணாடி வேறை.... இடைநடுவிலை. அவளின்ரை முகத்தைப் பார்க்காமல் அதைத் திருப்பி விட்டால் என்ன?.... வேண்டாம் பிறகு அதுவும் பிரளயமாகி....”
என் முதுகோரத்து ஸ்பரிஷத்துக்கே தடை விதிக்கும் அளவுக்கு வெளிப்பட்ட அவளின் கோபத்தைக் கடந்துவிட்ட இரண்டு வருடங்களில் இன்றுதான் முழுமையாக நான் அறிந்திருக்கின்றேன்.
இப்போதுவரை, அவள் என்முகத்தை நேரே பார்க்காது விட்டு இருபத்து நான்கு மணித்தியாலங்கள் நத்தையாய் நகர்ந்து சென்றுவிட்டன.
திருமணத்தின் பின்னர் தான் அவளுக்கு வேலை கிடைத்தது. அவளை பஸ் ஏறி இறங்கி அலையவிட எனக்கு விருப்பமில்லை. அவளுக்காக நானும் மாற்றம் எடுத்துக் கொண்டு அவளோடு வந்து ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறோம்.
எங்களுக்கு கலியாணமாகி இரண்டு வருடங்களும் இரண்டு மாதமும் ஆகிவிட்டது. ஒரு நாட்கூட நான் அவளோடு அப்படிக் கதைத்தது கிடையாது.
வழமையாக அதிகாலையில் எழுந்து சாப்பாடு தயாரித்து எடுத்து, இருவருக்கும் இரண்டு ‘பார்ஷல்கள்’ கட்டிவைத்து, முதனாள் போட்ட தன்னுடையதும் என்னுடையதுமான உடைகளை துவைத்து, உலரப்போட்டு பாடசாலைக்குப் புறப்படுவதில் அவளுக்கு அலாதி திருப்பி.
நான் படுக்கையிலிருந்து எழுந்து வரும்போது முகம் கழுவி, தலைவாரி, நெற்றியில் விபூதிப் பூச்சு ஜொலிக்க குங்குமப் பொட்டுடன் பிரகாசிக்கும் அவளின் தேஜஸ் என்னுள் அந்த நாளின் இயக்கத்துக்கான சக்தியாக ஊற்றெடுக்கும்.
இன்று காலையில் அவள் எதையும் செய்யவில்லை. அவ்வளவு வெப்பிராசம் அவளுக்கு. பாடசாலைக்குப் போகும் வழியில் ஆளுக்கு மூன்று தோசைகளை ‘பார்ஷல்’ கட்டி எடுத்துக் அவளின் ‘ஹாண்ட் பாக்கில்’ நிர்ப்பந்தமாக ஒரு பார்ஷலை திணித்து விட்டேன்.
‘ஷிப்’ பூட்டப்படாத இடைவெளி ஊடாக பிரித்தே பார்க்காது திருப்பிக் கொண்டு வரும் அந்தப் ‘பார்ஷல்’ என் கண்ணில்படுகின்றது.
“அவ்வளவு நடப்பு அவவுக்கு. முப்பது ரூபா குடுத்து வாங்கின சாப்பாடு..... தானும் செய்யமாட்டா வாங்கிக் குடுத்ததையும் கோபத்திலை தின்னாமல் திருப்பி கொண்டுவாறா...... கொழுப்புக் கூடிப் பேச்சு....”
என் மனதில் சினம் எழுந்து வர எனக்குள் நானே கறுவிக் கொண்டேன்.
“பாவம்..... எவ்வளவு களைத்துப் போயிருப்பாள் காலையில் தேத்தண்ணி கூட குடிக்காமல் போனவள்....”
காலையில் அவள் அவசர அவசரமாக தேனீர் வைத்து ஒரு குவளை தேனீரை என்முன் ‘தொப்’ என்று வைத்துவிட்டு விசுக்கெனத் திரும்பிய வேகம். அவளும் தேனீர் குடிக்கிறாளா என்பதை அவள் அறியாமலே நோட்டமிட்டேன். அவள் குடிக்கவேயில்லை. என் முன்னே அவள் வைத்துவிட்டுப்போன தேனீரிலிருந்து பறந்து கொண்டிருந்த ஆவி அவளின் மனக் கொதிப்பின் வடிவமாகி.........
அனேகமான காலைகளில் மேசை மீது தேனீரை வைத்துவிட்டு, நான் தேனீர் பருக தானும் பருகிக் கொண்டே தான் படித்த ஏதாவது ஒரு புதுக்கவிதையின் அற்புதத்தை ரசனையோடு அவள் கூறக் கேட்பதில் ஒரு இனிய சுகம்.
“ச்சே.... எவ்வளவு பெரிய பிழையை விட்டிட்டன் காலையிலை அவளை வில்லங்கமாகத் தன்னும் ரீ குடிக்க வைச்சிருக்கலாம்......”
கண்ணாடியில் அவளைப் பார்க்கின்றேன் அப்படியே இறுகிப்போனபடிதான். எப்படி அவளால் இவ்வளவு நேரமும் தொடர்ந்து முகத்தை அப்படியே வைத்திருக்க முடிகிறது. வைராக்கியம் என்பதன் வடிவங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
அவளின் வைராக்கியத்தில் நியாயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. நானும் ஒரு அவசரக்குடுக்கையன். எதுக்கெடுத்தாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டு பின்னர் அவஸ்த்தைப்படும் பேர்வளிகளில் நானும் ஒருவன்.
உண்மையில் காஞ்சனா நேற்று வாங்கிவந்த சாறிகள் இரண்டும் அழகாகத்தான் இருந்தன. நான்காயிரம் ரூபா கொடுத்தாலும் அவை இரண்டும் தரத்தில் உயர்ந்தவைதான். ஆனால் நான் கூறிய வார்த்தைகள் காற்றடைத்த பலூனில் ஊசி பாய்ந்தது போல அவளிடமிருந்த உயிர்ப்பை உறிஞ்சி எடுத்து அவளையச் சப்பளித்துவிட்டன. நான் சரியான சுயநலக்காரன் என்னுடைய நோக்கம் நிறைவேறாததற்காக அவளின் மனதை ரணப்படுத்திவிட்டேன்.
“இப்ப என்னத்துக்கு உந்தச் சாறி?.... உது உதவாத சாறியாக் கிடக்கு. உதுக்குப் போய் நாலாயிரம் குடுத்திட்டு வாறா..... சம்பளம் எடுத்தால் காசை வீட்டுக்கு கொண்டு வாறதை விட்டிட்டு சும்மா அளவுக்கு மிஞ்சின வேலை பாக்கிறது”
என்னுடைய இந்த வார்த்தைகள் போல கொடிய வார்த்தைகளை இந்த இரண்டு வருடங்களில் அவள் கேட்டதில்லை.
எதிர்பார்ப்புக்கள் பொய்க்கும் போது ஏமாற்றங்கள் உருக் கொள்வது வழமைதானே.
“பள்ளிக் கூடத்திலை ஒரு ரீச்சர் இந்தியா போய் வந்தவ..... அவ என்னை நினைச்சுக் கொண்டு வந்தா..... நான் என்ன செய்யிறது வாங்கினால் தானே மரியாதை.......”
அவளின் சிணுங்கிய வார்த்தைகளை இப்போது எண்ணும் போதும் எனக்குள் கழிவிரக்கம் பெருகியது.
“நான் உன்ரை சம்பளத்திலை கொஞ்சம் காசு வாங்கி என்ரை சம்பளத்தோடை சேர்த்துச் செய்ய நினைச்சது...... எல்லாம் வீண்.... வீண் வேலை பாக்கிறது தான் உனக்கு வேலை”
நான் தான் கொதித்த வார்த்தைகளை அவள் மீது சிந்தினேன். அவள் துடித்துப் போனாள். என்பதைக் கண்கள் பனித்துக் காட்டின.
“என்ன செய்ய நினைச்சியள்?”
அவளின் வார்த்தைகள் பதுங்கின.
“உனக் கென்னத்துக்கு அது?.... ஊதாரித்தனம் பண்ணிப்போட்டு..... முட்டைக் கண்ணீர் வேறை.....”
அப்போது இறுகிப் போனவள் தான் இது வரை என்முகத்தைத் தானும் பார்க்கவேயில்லை.
அன்பு, அக்கறை, அரவணைப்பு இவை பேரம் பேசலுக்கு அப்பாற்பட்டவை என்பதை புரியாதவனா?..... நான் அவளுடன் இப்படி நடந்தது அவளைப் புண்படுத்தி விட்டேனே.
முன்னே வீதியை திடீரெனக் கடந்த ஒரு பாதசாரியைக் கண்டு ‘பிரேக்’ போட்டேன் அந்தரித்துப் போய் என் தோளினை இறுகப் பிடித்துக் கொண்டாள். கண்ணாடியில் அவள் முகத்தில் ஒரு மெல்லிய அதிர்வு. ‘கவனம்’ என்று எனக்குக் கூறுவது போல. அனாயசமாக தோளியைப் பற்றிய கையை எடுத்துக் கொண்டாள்.
வீட்டினுள் நுழைந்ததும் ‘ஹாண்ட் பாக்கின்’ உள்ளேயிருந்த பார்ஷலை எடுத்து நான் பார்க்கும் படியாக மேiசையில் வைத்து விட்டு உடைகளை களைவதற்காக அறையினுள் சென்றவள் எதற்காகவோ வெளியே வருவதை தாமதப்படுத்திக் கொண்டிருந்தாள்.
என் உண்மையான அன்பை அவளிடம் காட்டுவதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தைத் தரமறுத்துவிடுவாளோ என்ற ஏக்கம் என்னுள்.
அறையினுள் நுழைந்து வெகுஇயல்பாக அவளின் கைகளைப் பற்றி அதுவரை என் காற்சட்டை பையிலிருந்த அந்தச் சிறிய பெட்டியை கையில் திணித்துவிட்டு சட்டென்று வெளியே வந்து மேசையின் முன் அமர்கின்றேன்;. மனம் என் புத்தியிலும் வேகமாக பறப்பது போல........
அவள் வைத்த பார்ஷலை அவிழ்த்துப் பார்க்கின்றேன். அதனுள் நான் எப்போதும் விரும்பிச் சாப்பிடும் ‘கடலை மா போளி’ஒன்று. அவளின் பாடசாலை ‘கன்ரீனில்’ வாங்கியிருப்பாள். கொண்டு போன தோசையை அவள் சாப்பிட்டிருக்கிறாள் என்ற வகையில் என்னுள் ஒரு திருப்தி.
இது எனக்காக........
போளியை பிய்த்து வாயினுள் திணித்தக் கொண்டிரு ந்தேன்.
என் பின்புறத்தே முதுகோரம் அவளின் ஸ்பரிசம் எனது கையைப் பற்றி அந்தச் சிறு பெட்டியைத் தந்து “நீங்களே போட்டு விடுங்கோ....” என்றாள்.
அந்த எண்கோணவடிவச் சிறிய நகைப் பெட்டியிலிருந்த சங்கிலியை எடுத்து வாஞ்சையோடு அவளின் கழுத்தில் சூட்டிவிடுகின்றேன். நான் எதிர்பார்த்த பிரமாணத்தில் அவளின் கழுத்தோரத்தில் அது பளபளத்து உருண்டது.
“இதைத்தான் செய்ய நினைச்சியளாக்கும்....”
அணிவித்து விட்ட என்கைகளில் ஒன்றை பூவால் நுள்ளியது போலக் கிள்ளினாள்.
அவள் சிணுங்கிச் சிரிக்கும் போது கண்களிலிருந்து ஓரிரு மணிகளும் உதிர்ந்தன.

மல்லிகை- ஜுலை - 2008

குதறப்படும் இரவுகள்
----இ.இராஜேஸ்கண்ணன்


இரவு என்பது ஒரு அற்புதமான உற்பவிப்பின் ரகசியம். ஊழியும் இருள் கவிந்ததுதான். மனிதன் உயிராகும் கருவறை இருண்டது. கடவுள் உறையும் கருவறையும் கூட இருள் கவிந்ததுதான். கதைகளில் கூறப்படும் அரக்கர்கள் இருள் நிறத்தினர். இரணியன், மகிடாசுரன், மாபலி என்று நீளும் பட்டியல் மட்டுமல்ல இராமன், கிருஷ்ணன் போன்ற ர~கர்களும் இருண்டவர் களே. இராட்சதர்கள் மட்டு மல்ல ரசகர்களிலும் இருள் நிறத்தினர் அதிகம் பேர்.
இரவுகள் இனிமை யான அற்புதங்கள் என்றால் அவை என்னை ஆதர்சயப் படுத்துவன.
இரவுகளைப் பாடாத கவிஞர்கள் இல்லை. நிலவு வழியும் இரவுகள் கற்பனைகளாய் நீளும். அம்புலி மாமா வா..... அம்மா வெளியே வா அம்மா..... என்றெல்லாம் இரவுகள் பாடவைத்தன.
வெண்மணல் பரப்பிய முற்றத்தில் சால்லைத் துண்டை விரித்தபடி அப்பா பள்ளிகொள்வார். அவரின் வயிற்றோடு நாரிசாத்தி அம்மா சோறு குழைத்த பாத்திரத்துடன். மணலில் கால்கள் புதைந்தபடி முன்னே நாங்கள் மூன்று பேரும். பூவரசம் இலையில் சிறிய சிறிய கவளங்களை அம்மா பிடித்து வைப்பாள். கவளங்களின் மேலே முள் அகற்றிய சிறுதுண்டு தீயல்மீன், சில சமயம் நெருப்பில் வாட்டிய திரியாப்பாரைக் கருவாட்டுத் துண்டு. நிலவு இல்லாவிட்டால் கண்ணாடிலாம்பு வெளிச்சம்.
நானும் தங்கச்சியும் பாட்டுக்குப் பாட்டு. அப்பா நடுவர் - அப்துல் ஹமீத் போல. சில சமயம் அம்மாவும் அப்பாவும் பாட்டுக்குப் பாட்டு நாங்கள் நடுவர்கள். விடுகதைகள் கூறி அவிழ்த்தலும்.
சுட்டிபுரம் கண்ணகை அம்மன் கோயிலில் சீர்காழியின் கச்சேரி. கால் நடையாய் இரவைக் கிழித்து வயல் வரம்புகள் தரவைகள் தாண்டி கச்சேரிக்கு. வல்வெட்டித்துறையின் இந்திரவிழா ஓர் இரவில். அகிற் புகை வாசம் கமகமக்க பித்துக்குளி முருகதாஸின் கச்சேரிக்காக கூடிய ஓர் இரவு.
அந்த இரவுகள் அர்த்தம் பொதிந்திருந்தன.
காதுகளை அடைக்கும் இருளின் வாளிப்பினை சமயம் வாய்க்கும் போதிலெல்லாம் அனுபவிப்பதில் அளவில்லாத பற்று எனக்கு. அந்தகாரம் கிழித்து வரும் பூச்சிகளின் ரகசியங்களை ஒட்டுக்கேட்டு அனுபவிப்பதில் அலாதி சுகம். தென்னங் குருத்துகளைத் துளைக்கும் வண்டின் கிறீச்சிடும் ரீங்காரம். பின்புறத்து களஞ்சிய அறையில் போடப்பட்டிருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களிடையே சந்ததியின் நீட்சிக்காக சல்லாபிக்கும் தத்துவட்டியன்களின் கீதம். பிரசவிக்கக் காத்திருக்கும் சோடிக்கு நெல்மணி சேர்த்து முகட்டுவளையில் ஓடிவரும் எலியின் சிறுகால் ஒலி. தூரத்தில் எங்கோ ஓரிடத்தில் சோடிநத்தின் முனகல். புத்தக அறையின் பழைய பத்திரிகைக் கட்டுக்களிடையே கரப்பான்களின் குசுகுசுப்பு. வீட்டின் பின்புறத்தே ஆட்டடியில் அசைமீட்கும் தாயாட்டின் நெறுமலும், மடியில் வாய்புதைத்த குட்டியின் மிடறின் - வழி பால் இறங்கும் ஒலியும். அடைவைத்து பொரித்த குஞ்சுகளை தன் சிறகுப் போர்வையுள் விரித்துக் கொள்ளும் கோழியின் பாசப் பரிவின் ஒலி. இருளைக் கிழித்து நீளும் என் காதுகளின் புலன் இவற்றைக் பிரித்துக் பிரித்து தனித்து ரசித்துக் கொள்ளும்.
மூலையிலே தணித்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி லாம்பின் மங்கிய ஒளியில் அவளின் முகம் எண்ணெய்த் தாளின் ஒளிக்கசிவுடன். கலைந்த கேசம் கன்னங்கள் வழியே பரவிக் கிடக்கும். நெற்றியில் அன்று பகல் முழுவதும் பவ்வியமாக இடப்பட்டிருந்த ‘மரூண்’ நிற குங்குமம் வியர்வைத் துளிகளோடு கரைந்து நெற்றிப் புருவம் வரை கசிந்திருக்கும். கழுத்தைச் சூழ்ந்த சங்குவளைய தசை மடிப்புக்களிடையே நெளிந்து கிடக்கும் கட்டைச் சங்கிலி. கால்களை மடித்து நாரித் தண்டை வளைத்து மார்பின் மென்மையான உஷ்ணத்தை ஒன்றரை வயதாகின்ற என் செல்லத்தின் கன்னங்களில் சுகம் தரவைத்துப் படுத்துக் கொண்டிருப்பாள். ஆழ்ந்த உறக்கம்.
பாவம் அவள். பகல் முழுவதும் சக்கரத்தை கால் களிலே கட்டியபடி சுழன்றடிப்பாள். அதிகாலையில் நான்கரை மணிக்காக அலாரம் வைத்து விட்டு படுக்கைக்குப் போவாள். செல்லம் அருளுவதற்கு முன்னர் காலைச் சாப்பாட்டுக்கு உரியவற்றையும், மதியத்துக்கு இன்னொன்றையும் தயார் செய்து விட்டு எனக்குரிய ‘பார்சலை’ என் பையினுள் திணித்து விட்டு இரவு முழுவதும், முதனாளும் செல்லம் நனைத்துத் தள்ளிய துணிகளைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்று மீளவும் மணி ஏழாகிவிடும். தன்னுடைய புத்தகப்பைகளை ஒழுங்குபடுத்தி பாடக்குறிப்புகள், அடையாள அட்டைகள், மோட்டார் சைக்கிள் ‘பாஸ்’ என்பவற்றைச் சரிபார்த்துக் கொள்ளவும் செல்லம் கண்விழிக்கவும் சரியாகவிருக்கும். மெல்லிய சுடுநீர் வைத்துச் செல்லத்தைத் துடைத்து ‘பௌடர்’ போட்டு பால் கொடுத்து தாய்வீட்டில் ஒப்படைத்துவிட்டு அவள் பள்ளிக்கூடம் புறப்படும் போது நான் அரைவாசித் தூரத்தைக் கடந்து பயணித்துக் கொண்டிருப்பேன்.
பாடசாலை முடித்துவந்ததும் செல்லத்துக்கு பால் கொடுத்தல், குளிப்பாட்டுதல், காயப்போட்ட உடுப்புகளை எடுத்துவைத்தல், வீடுவாசல் கூட்டுதல், இரவுச் சாப்பாட்டுக்குத் தயார்ப்படுத்துதல், அதிகாலை சாப்பாடு தயாரிக்க ஆயத்தம் செய்து வைத்தல், அடுத்த நாள் பாடக்குறிப்புகளை ஆயத்தம் செய்தல், வேண்டும் போதெல்லாம் இரவில் செல்லத்துக்குப் பால் கொடுத்தல் என்று தொடரும் பம்பரவாழ்க்கை அவளுக்கு.
இவ்வளவு வேலைகளையும் வரித்துப் போட்டுச் செய்து கொண்டு தன் கபிலநிற விழியால் என்னைப் பார்த்து புன்னகை செய்யவும் எப்படி முடிகிறது?...
அவளின் கன்னத்தில் சிதைந்திருந்த மயிர்களை ஒதுக்கி காதோரம் விட்டுக்கொண்டு மிருதுவாக அவளின் நாரியை தடவிக் கொடுப்பேன். ஏதோ ஒன்றைத் தவறவிட்டவ ளாய் திரும்பி என் மார்போரம் முகம் புதைப்பாள். அவளை நெஞ்சோடு அணைத்துக் கொள்வேன்.
இன்றும் அப்படித்தான். காதுகளை அடைக்கும் அந்தகார இருள்.
காலையில் பரபரப்புக்களிடையே அவளின் கண்களில் தெரிந்த ஏக்கம் என் மனதின் ஆழம் வரை கிறக்கம் தந்தது. மூன்று நாட்களின் பின் முதல் நாள் முழுகிய தலை. அருகில் அவள் நடக்கும் போது காற்றில் கலக்கும் வியர்வை வாசனை. பாதங்களின் மேலே உருளும் பாதசரத்தின் சின்னச் சிணுங்கல். பின்னேரம் வரேக்கை ரீயோடை சாப்பிட ஏதேனும் வாங்கி வாங்கோ என்ற வார்த்தைகளில் வெளிப்பட்ட நளினம். அன்றைய பகல் பலமடங்குகளாய் நீண்டு கழிந்தது எனக்கு.
இரவின் நிசப்தம். முற்றத்தில் நான் வளர்த்த மரங்கள் கூட மௌன பூதங்களாய் நின்றன. பயனற்றுத் தூங்கி வழியும் நிலா. பிள்ளையை அணைத்தபடி அவள். முதுகுப்புறம் நான். காலையில் பார்த்த பத்திரிகைச் செய்தி படிமமாய் மனதில் விடாப்பிடியாய்.
எங்கோ ஒரு திசையில் நாயொன்றின் ஊளை ஒலி. வீழும் போது ஓலையைத் தட்டும் பனம்பழத்தின் ஓசையில் பதகளிக்கும் அணிலின் கூக்குரல். எங்கோ ஒரு தொலைவில் ஏதோ ஒரு இயந்திர உறுமல். காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.
“முந்தநாள் இரவும் பரமநாதன் வீட்டிலை மரநாய் வந்து பேடு ஒண்டைக் கொண்டு போட்டுதாம். எங்கடை பக்கம் வலுத்த சாரையளும் அடிக்கடி வந்து போகுதுகள். குஞ்சுகளும் கவனம். கீரியள் பெரிசா இரவிலை வராது. எண்டாலும் சொல்லிக் கொண்டே. இரவிலை அடிக்கடி காதைக் குடுத்து சத்தஞ் சந்தடியை கேளுங்கோ” என்று பக்கத்துவீட்டு மாமி காலையில் கூறியது ஞாபகம் வந்தது.
வாங்கிவிட்டு ஒருவாரங்கூட ஆகாத விறாத்துக் குஞ்சுகள் நான்கும், ஏற்கனவே பொரிச்ச குஞ்சுகள் ஐந்தும் தனித்தனியான கூடுகளில் அடைக்கப்பட்டிருந்தன.
அவள் இன்னும் பூரணமாக நித்திரையாகி விடவில்லை. பிள்ளை மார்பை உறிஞ்சிக்கொண்டிருந்தது. அவளை ரசிக்கும் நிலையில் என் மனம் இல்லை. பத்திரிகைச் செய்தியின் கீழே போடப்பட்டிருந்த இறந்து கிடக்கும் அந்த பெண்ணின் புகைப்படம் மனத்திரையில் அப்பியபடி. மனதெல்லாம் ஒருவித வெறுமை உணர்வு ஆட்கொண்டிருந்தது.
என்னுடைய செல்லத்தைப் போன்ற அந்தப் கோழிக் குஞ்சுகள் தாயின் இறக்கை அணைப்பில் இதமாகப் படுத்திருக்கும்.
பக்கத்துவிட்டு மாமி கூறியது மீண்டும்....
அவள் திரும்பிப் படுத்துக் கொண்டு என் மார்பில் தன் மூச்சுக் காற்றினால் ஸ்பரிசித்தாள்.
மனம் பத்திரிகைச் செய்தியையும், மாமியின் வார்த்தைகளையும் தவிர எதிலும் லயிக்கவில்லை என் மனக்குழியில் ஆயிரம் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன.
திடீரென வீட்டின் பின்புறம் கோழிக்கூட்டில் தான் கூக்குரல். குஞ்சுகள் பதகளித்துக் கீச்சிட்ன. விறாத்துக் குஞ்சு கள் செட்டைகளை அடித்துக் கீச்சிடும் சத்தம். இருளைக் கிழித்து வந்த அலவமான ஓலங்களாய்.....
சூய்.... சூய்.... சூய் ஓடிச் சென்றேன்.
குஞ்சுகள் என் செல்லம் போன்ற குஞ்சுகள் பதகளித்தன. தாய்க் கோழியைக் காணாது பரிதவித்தன. தாயின் சிறகுக் கணப்பு இழந்து அல்லோல கல்லோலப்பட்டன.
வீட்டுக் கோடிப்புற மூலையில் கூடு பிய்த்து இழுத்து வரப்பட்ட தாய்ப்பேடு குதறப்பட்டுக் கிடந்தது. இரத்தம் தோய்ந்த இறகுகளோடு.
‘தம்பி உது மரநாய் அல்லது கீரியாகத் தான் இருக்கு மப்பு’.
சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த மாமியின் ஊகம் இது. மரநாய் எண்டால் என்ன?... கீரிதான் எண்டால் என்ன?.... இந்தக் குஞ்சுகள்?.... “சடலமாக மீட்கப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்....” பத்திரிகைச் செய்தி மீண்டும் என் மூளை அணுக்களில் விடாப்பிடியாய் சுவறுகின்றது.
அம்மாவின் கவளச்சோறு....
காதை அடைக்கும் இருளில் பூச்சிகளின் ரகசியம்...
என்னவளின் பாதர சிணுங்கல்.... எல்லாம் பொய்யாக இருள் என்னை அப்பிப் பிடித்துப் பிய்த்துத் தின்றது.
என் செல்லத்தை அணைத்தபடி அவள். தலை மாட்டிலே அதிகாலை நான்கரைக்காக அலாரம் வைத்த மணிக்கூடு இயந்திர இயக்கத்துடன். அந்தகார இருள் மட்டும் அப்படியே......

- ஞானம் - மார்ச் 2008
செம்பியன் செல்வன் ஞாபகார்த்த 2ம் பரிசு