'இலக்கியத்தில் சமூகப் பிரதிபலிப்புகள்: சமூகவியல் கோட்பாடுகளின் வழியான திறனாய்தல்" எனும் நூல் யாழ்ப்பாணம், திருநெல்வேலி தூண்டி இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 2020இல் வெளிவந்தது. 134 பக்கங்களைக்கொண்ட இந்த நூல் 9 விரிவான கட்டுரைகளை உள்ளடக்கியது. தூண்டி தி.செல்வமனோகரன் அவர்களின் பதிப்புரையில் 'இக்கட்டுரைகள் யாவும் சமூகம், இலக்கியம் எனும் இரு அம்சங்களும் ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் சமாந்தரமான இயங்கியல் நிலையில் திகழ்வதை தெளிவுபடுத்துகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு சமூகவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இலக்கியத்தை விளங்கிக்கொண்டு, சமூகத்திலுள்ள பிரச்சினைகளை இலக்கியம் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன. ஆய்வரங்குகளில் படிக்கப்பட்ட கட்டுரைகளும், சிறப்பு ஏடுகளில் வெளியான கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.